காமராஜ்: 101 (dummies)
தலைவர் (காமராஜ்) வழக்கம் போல தனது முன்அறையில் அமர்ந்து வந்தோரோடு அளவளாவியும், அனுப்பிக்கொண்டும் இருந்தார். நாங்கள் நால்வரும் (அரு.சங்கர், தனுஷ்கோடி, டி.எஸ்.டி.ராஜா, டி.ஏ.எம்.ஏ.மாரிமுத்து)முன்னேறி அறையில் இடம் பிடித்து விட்டோம்.அப்போது நாங்கள் சற்றும் எதிபாராத நிலையில் பதினெட்டு வயது இளைஞன் ஒருவன், மிக உரிமையுடன் தலைவர் முன் வந்து நின்றான்.அவன் கையில் ஒரு அச்சடிக்கப்பட்ட வெள்ளைதாளிருந்தது. "என்னடா கனகவேல், என்னா விஷயம்?...என்னது காகிதம்" கேட்டபடியே வாங்கி படித்தார்.இளைஞன் பேச ஆரம்பித்தான், "தாத்தா, எம்.பி.பி.எஸ்-க்கு அப்ளிகேசன் போட்டேன், இன்டர்வி நடந்திருச்சு, நீங்க சி.எம்-கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்கனா இடம் கிடைச்சுரும், லிஸ்ட் போடுறதுக்குள்ள சொல்லுங்க தாத்தா, எங்க குடும்பத்துல நான் ஒருத்தனாவது படுச்சி டாக்டராகி விடுவேன்" என கெஞ்சுகிறான்.தலைவரின் பக்கவாட்டில் மிக அருகில் நின்றிருந்த எனக்கு தலைவரின் கையில் இருந்த அந்த தாளின் சில வாசகங்கள் சில தெளிவாக தெரிந்தன. அதில்...
C/O THIRU. K. KAMARAJ
ALL INDIA CONGRESS COMITTEE PRESIDENT
8,THIRUMALAI PILAI ST
MADRAS-17
என ஒரு கேள்விக்கு பதிலாக எழுதி இருந்தது. தலைவரின் அடுத்த கேள்வியும் அது பற்றியதாகவே இருந்தது..."ஆமா, என் பேரை எதுக்கு எழுதினே?""இல்ல தாத்தா, என் மெட்ராஸ் அட்ரஸ் கேட்டிருந்தாங்க, எனக்கு உங்களை தவிர இங்கே வேறுயாரையும் தெரியாதே...இன்டர்வியூவலயும் கேட்டாங்க...தாத்தான்னு சொன்னேன்". அந்த இளைஞன் யாரென்பது இப்போதுதான் எனக்கு புரிந்தது. காமராஜரின் ஒரே தங்கை திருமதி. நாகம்மாளின் மகள் வழி பேரன்."கனகவேலு, இந்த டாக்டர் படிப்பு, இன்ஞினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவுங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாறுக்கும் பொதுவா கமிட்டியை போட்டுட்டு, பிறகு இவனுக்கு சீட் குடு, அவனக்கு சீட் குடுன்னு சிபாரிசு பண்றதுன்னா பிறகு அதுக்கு கமிட்டியே போட வேண்டியதில்லையே... நீ நல்லா பதில் சொல்லி இருந்தீன்னா உனக்கு கிடைக்கும். கிடைக்கலேன்னா பேசாம கோயமுத்தூரில் பி.எஸ்.சி அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு, அதிலே சேர்ந்து படி... அந்த படிப்புக்கு நல்ல எதிர் காலம் இருக்கும். என்னால் சிபாரிசு பண்ண முடியாது" என்று சொல்லி அவன் தந்த தாளையும் அவனிடம் தந்து அனுப்பிவிட்டார். அவனை அனைவரும் அனுதாபத்தோடு பார்த்தனர். அந்த வருடம் அவனுக்கு மருத்துவ படிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை.
-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: (12) நடுவு நிலைமை [சமநிலை போற்றல்)
குறள்:
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
பொருள்:
முதலில் சமமாக நின்று, பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்திக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால்
அமைந்து, ஒரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோர் அழகு.
-------------------------------------------------------------------
- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும்
Courtesy/Credit:
My special thanks goes to the sources listed in below link.
http://dandanakka.blogspot.com/2005/04/blog-post.html
This series is made possible by those sources, somtimes
the contents are reproduced. Either way the credit goes
to sources.